இல்லறம் என்பது இனிமையான பந்தம், புரிந்துணர்வில் தான் அந்த உறவு உயிர்ப்படைகின்றது. புரிதல் இல்லாத இல்லறங்கள் நீண்டு நிலைப்பதில்லை. அவை பாதியில் துவண்டுவிடுகின்றன. மனதில் மெல்ல மெல்ல தோன்றும் வெறுப்பும் கோபமும் உள்ளத்தில் புகைய, வெளியே சிரித்து வாழும் நிலைதான் இன்று பலரிடம் உள்ளது. அந்தகைய பந்தத்தில் ஒரு பற்றுக்கோடு இருப்பதில்லை. புரிந்துகொண்டால் விட்டுக்கொடுப்பது அத்தனை கடினமில்லை. ஒருவரை ஆழமாக உணர்தல் என்பது அவரது குணங்களோடு இயைதலே ஆகும்.
சீராளனும் கானகியும் அழகான இல்லறத்தின் உரிமைக்காரர்கள். அவர்களின் இல்லற பந்தம் இன்றுவரை அழகிய நீரோடையாய் சலசலத்து ஓடுகின்றது என்றால் அவர்கள் இருவருக்குமான புரிதலே காரணமாகும்.
நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவள் கானகி. இசையாளனின் அப்பாவும் கானகியின் அப்பாவும் நண்பர்கள். அயல் வீடுகளாய் உருவான பந்தம் அன்பான உறவாகத் தொடர்ந்தது. காலஓட்டத்தில் தொழில் நிமித்தம் இரண்டு குடும்பங்களும் பிரிந்துவிட்டன. சீராளனின் குடும்பம் வெளிநாடு சென்றுவிட கானகியின் குடும்பம் இங்கேயே இருந்தது. ஆண்டுகள் கடக்க நண்பர்களுக்குள் எப்படியோ தொடர்புகள் ஏற்பட்டுவிட இருவீட்டாரும் பேசிமுடித்து உறவினை ஏற்படுத்திக்கொண்டனர்.
கானகியின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது, சீராளனோடுதான். அவளுக்கு ஏராளமான கனவுகள் இருந்தன. தன் கனவுகளைப் புதைத்துவிட்டு திருமணம் செய்வதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை, ஆனாலும் பெற்றவர்களின் கட்டாயத்திற்காகத் திருமணத்திற்குத் தயாரானாள். தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி மிகவிரைவாகவே நடந்துமுடிந்தது அவர்களின் திருமணம். கணினித்துறையில் சாதிக்கவேண்டும் என்னும் தன்னுடைய கனவு கலைகிறதே என்ற ஏக்கத்தோடுதான் மணமேடையில் அமர்ந்துகொண்டாள்.
அவளது தெளிவில்லாத முகமும் பொலிவிழந்த விழிகளும் சீராளனுக்கு எதையோ உணர்த்தியது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதால் அவளோடு ஆறஅமர கதைக்கும் அவகாசமும் அவனுக்கு இருக்கவில்லை. அப்பாவின் வார்த்தைக்கிணங்க அவசரமான விடுப்பு எடுத்துக்கொண்டு விரைந்து வந்திருந்தான். ஒரே மாதத்தில் பேசிமுடித்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்பதாலும் கானகிக்கு பரீட்சை உள்ளது என்றதாலும் அவளோடான உரையாடல்களைக்கூட அவன் விரும்பவில்லை. அவளது கல்வி தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். அவளோடு பேசவேண்டும் என்ற தனது ஆசைகளைக்கூட ஒதுக்கியிருந்தான் அவன். அப்படியிருக்க, கானகியின் இந்த நிலைக்கு என்ன காரணம் என்பது அவனுக்குப் புரியவில்லை.
திருமணமான அன்று, அவளிடம் பேசியபோதுதான் அவளது உள்ளத்தின் ஏக்கங்கள் அவனுக்குத் தெரிந்தது. தனது இலக்குகள் , இலட்சியங்கள் பற்றி அவள் கூறியபோது அவனே ஒருகணம் ஆச்சரியப்பட்டுப்போனான்.
உடனடியாக அவளுக்கு தான், தெம்பு கொடுக்கவேண்டும் என எண்ணியவன், “இப்போதும் ஒன்றும் மாறவில்லை கானகி, கல்யாணமாகிவிட்டது என்பதற்காய் நீ மாறிவிடவேண்டும்என எண்ணும் சராசரி ஆண் நான் கிடையாது, திருமணம் என்பது உன் சந்தோசங்களிற்கானதே தவிர வருத்தத்திற்கானது அல்ல, உன்னில் உன் எண்ணங்களில் எந்த மாற்றமும் வேண்டாம், படிப்பை எதற்காகவும் நிறுத்தவேண்டாம், நீ நீயாக இருப்பதைத்தான் நான் விரும்புகின்றேன், என்னோடான உன் வாழ்க்கை, உன் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் தான் ஆரம்பிக்கவேண்டும், நீ உன் இலட்சியங்களில் இன்னும் இன்னும் உயரவேண்டும் என்பதே என் ஆசையும் கூட, தொடர்ந்து படி, அங்க வர்றதுக்கு ரெண்டு வருசமாகும், அதுக்குள்ள நீ மேல படி, அதுக்குப்பிறகு அங்க வந்தும் படிக்கலாம், முதல்ல எங்களுக்குள்ள ஒரு நட்பு இருக்கட்டும், ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுகொள்ளுவம்” என்றவன் அவளது தலைகோதி அன்பாய் புன்னகைத்தான்.
அவனது முதல் ஸ்பரிசத்தில் ஒரு தாய்மை உணா்வினைக் கண்டாள் கானகி. அதுவே அவன் மீதான உயர்ந்த நேசத்திற்கு வித்திட்டது. தான் ஆசைப்பட்டபடியே மேற்படிப்பை முடித்து சாதனையை நிலைநாட்டினாள் கானகி. அவளது இலக்கின் திறன் கண்ட சீராளன், அவள் தன்னிடம் வந்த பின்னரும் கூட மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்துகொடுத்தான்.
தன் தேவைகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்த அவன் மீதான நேசங்கள் வளர்ந்துகொண்டே சென்றது, கானகிக்கு, அந்த நேசமே ஒரு இனிய இல்லறத்தை இருவருக்கும் பரிசளித்தது. காத்திருப்புகள் கனிகளையே கொடுக்கின்றன. இல்லறத்தின் அச்சாணியாய் மிளிர்வதே அன்புதான்.

கோபிகை.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal